தமிழக விளையாட்டுத்துறை மந்திரியும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம். காட்பாடி விஷ்ணு திரையரங்கில் நேற்று கோலாகலமாக வெளியீட்டு விழா நடந்தது.
இந்த வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு 100 காது கேளாத மாணவர்களுக்கு சிறப்புக் காட்சியில் அனுமதி அளித்து உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரியும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவரும், பள்ளி கல்வி துறை மந்திரியுமான அன்பில் மகேஷ் பொய்ய மொழி, டி.ஐ.பி லண்டன் பி.கே. பாபு மற்றும் மாநில நிர்வாகிகளான ஏ.ராஜா, ஜி.எம். கலீல் ஆகியோர் உத்தரவின் பேரில், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் 15 திரையரங்குகளில் இந்த கண்ணை நம்பாதே திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் டீட்டா சரவணன் அறிவுறுத்தலின் பேரில், இந்த 15 திரையரங்குகளிலும் கட்-அவுட்டுகள், டிஜிட்டல் பேனர்கள் வைத்தும், மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கியும், மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகமாக தொடக்க விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி விஷ்ணு திரையரங்கில் கண்ணை நம்பாதே திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று காலை முதல் திரையரங்கம் விழா கோலம் பூண்டது. இது ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமின்றி, பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்த சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் காண்போரை கவர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டீட்டா சரவணன் தலைமையில் நடந்த சிறப்பான ஏற்பாட்டின் பேரில், வேலூர் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த திரையரங்குக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ரசிகர் நற்பணி மன்றத்தின் சிறப்பு காட்சியிலேயே அந்த திரைப்படத்தை அவர்களுக்கு காண்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை காண வந்திருந்தவர்களையும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளையும் வாழ்த்தி, வரவேற்று சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயரும், காட்பாடி தெற்கு பகுதி திமுக செயலாளருமான எம். சுனில் குமார் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர் மாவட்ட சிறப்பு நிருபர் க.ஜெயகர்